Friday 12 April 2013

பிராணாயம்

சுவாமி விவேகானந்தர் கூறிய பிராணாயாமம்(மூச்சை அடக்கி ஆளுதல்)

மனிதனின் உடலும் மனமும் ஆரோக்கியமானதாக வைத்திருக்க நமது முன்னோர்கள் பல தியான வழிகளை நமக்கு அருளி சென்றனர்.அவற்றில் மிக முக்கியமான ஓன்று தான் இந்த பிராணாயாமம்.
பிராணாயாமம் என்றால் என்ன?

பிராணாயாமம் என்பது  நாம் சுவாசிக்கும் மூச்சை அடக்கி ஆளுதல் என்று பொருள். மனிதன் சுவாசிக்கும் மூச்சானது,முதலில் சுவாசப்பையினை இயக்க செய்கிறது. சுவாசப்பை இதயத்தை இயக்குகிறது. இதயமானது நமது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக இயங்கசெய்கிறது.இந்த சீரான ரத்த ஓட்டமானது மூளைக்குச் சென்று அதனை சீராக இயங்க செய்வதன் மூலம், நமது மனதானது மூளையின் கட்டளையின் மூலம் உடல் சீர்கெடாமல் பாதுகாப்பாக வைத்திருக்கின்றது. இதுவே பிராணாயாமம்  என்பதின் சுருக்கமாகும்.

பிராணாயாமம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி சுவாமி விவேகானந்தர் அவர்கள் நமக்கு அளித்துள்ள செய்முறையினை முறையாகச் செய்வதின் மூலம் அதன் முழுபலனையும் நாம் அடைய முடியும்.


சுவாமி விவேகானந்தர்

பிராணாயாமத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன அவை வருமாறு;

01.பூரகம் - மூச்சை உள்ளே இழுத்தல்

02.கும்பகம் - மூச்சை உள்ளே அடக்குதல்

03.ரேசகம் - மூச்சை வெளியே விடுதல்

சுவாசித்தல் என்ற இந்த தேவையான செயல் காலஅளவு மீறாத ஒழுங்கோடு செய்யப்படவேண்டும்.அதற்கு ஒரே வழி எண்ணிக்கை தான் .ஆனால் அந்த எண்ணிக்கை என்ற ஓன்று ஆழ்மனதை தொடுவதாக இல்லை.எனவே தான் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை  உச்சரித்து பிராணாயம் செய்வது சிறப்பானது.

பிராணாயம் செய்யும் வழிமுறை

பெருவிரலால் வலது நாசியை அடைத்துக்கொண்டு, 'ஓம்' என்ற மந்திரத்தை மனதார நான்குமுறை உச்சரித்த படியே இடது நாசி வழியாக மூச்சை நன்றாக உள்ளே இழுங்கள்.

அதன் பின்பு ஆட்காட்டி விரலை இடது நாசி மீது வைத்து, இரு நாசிகளையும் அடைத்து,'ஓம்' என எட்டுமுறை மனதால் உச்சரித்தபடி மூச்சை உள்ளே இழுத்து நிறுத்தி வையுங்கள்.    

பின்னர்,பெருவிரலை வலது நாசியிலிருந்து எடுத்து,'ஓம்' என நான்கு முறை உச்சரித்தபடி மெதுவாக மூச்சை வெளிப்படுத்துங்கள். உள்ளே இழுத்த மூச்சு அனைத்தையும் வெளியிடவேண்டும் என்பதால் மூச்சை வெளியே விடும்போது அடிவயிற்றை உள்ளிழுத்தபடி எல்லா மூச்சையும் வெளியேற்ற வேண்டும்.

மூச்சை உள்ளே இழுத்தல் ,உள்ளே அடக்குதல், வெளியே விடுதல் ஆகிய மூன்று செயல்களையும் செய்து முடித்தல் பிராணாயாமப் பயிற்சியினை ஒருமுறை நாம் செய்து முடித்துள்ளோம் என பொருள் .

பெருவிரலால் வலது நாசியை அடைத்து ஒருமுறை இந்த பயிற்சியை முழுமையாக செய்த பின்பு ஆட்காட்டி விரலால் இடது நாசியை அடைத்து மறுமுறை இந்த பயிற்சியை முழுமையாக செய்யவேண்டும்.இதுபோன்ற பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும்.

முதல் வாரத்தில் இப்பயிற்சியினை எட்டு முறை செய்ய வேண்டும்.அடுத்து வரும் வாரங்களில் மூச்சை இழுக்கும் கால அளவை ஆறுமுறை 'ஓம்' என உச்சரித்து அதிகபடுத்தவேண்டும். மூச்சை அடக்கப் பன்னிரெண்டு முறை  'ஓம்' என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மூச்சை வெளிப்படுத்தவும் ஆறுமுறை 'ஓம்' உச்சரிக்க வேண்டும்.

மேற்கொண்டு இந்த பயிற்சியினை நன்றாக செய்த பின்பு, காலஅளவை முடிந்தமட்டும் அதிகப்படுத்தலாம்.இவ்வாறு செய்வதினால் நமக்கு உடல் நிலையானது சீராக இருக்கவும்,மனஅமைதி ஏற்படவும் இப்பயிற்சி நமக்கு உதவும்.


இது மிகவும் எளிதான பயிற்சியாகும் இதனை முறையாக செய்தாலே இப்பயிற்சியின் முழுப்பயனையும் அடையலாம்.

இப்பயிற்சியின் மூலம் நமக்கு எந்தவிதமான உடல் சீர்கேடும் ஏற்படாத வண்ணம் இது நம்மை பலபடுத்தும்.எனவே இப்பயிற்சியினை சுவாமி விவேகனந்தர் கூறியது போல் சரியான முறையில் செய்து பயன் பெற அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment